Thursday, 19 February 2015

செய்தி




சேலம்:பிப்,20.
      சேலத்தில் நேற்று நடந்த பிரசித்தி பெற்ற மயானக் கொள்ளையில், ஆடு, கோழிகளை கடித்து, பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.சேலம் மாநகர், புறநகர் பகுதிகளில், ஆண்டு தோறும் மாசி மாத அமாவாசை நாளில், மயானக் கொள்ளை நடப்பது வழக்கம். அதன்படி, நேற்று நடந்த மயானக் கொள்ளையை முன்னிட்டு, சேலம் மாநகரில் உள்ள அங்காளம்மன், பெரியாண்டிச்சி அம்மன் கோவில்களில், ஒரு வாரமாக விழாக் கோலம் பூண்டன.நேற்று காலை, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, அம்மன் மயானம் அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில், பக்தர்கள் காளி, பெரியாண்டிச்சி வேடம் அணிந்தும், சிலர் பேய் வேடம் அணிந்தும் வந்தனர். இவர்களை பார்த்தால் பயம் கொள்ளும் வகையில், கழுத்தில் மண்டை ஓடு, மாட்டுக் குடல், எலும்புகளை மாலையாகவும், தனியாகவும் கோர்த்து போட்டுக் கொண்டு, ஆடியபடி வந்தனர்.
குறிப்பாக, செவ்வாய்ப்பேட்டை மயானம், ஜான்சன்பேட்டை காக்காயன் மயானம் ஆகியவற்றுக்கு, ஆயிரக்கணக்கான பக்தர்கள், வேடம் அணிந்து ஆடியபடி வந்தனர். அவர்கள், ஆக்ரோஷமாக கோழிகள், ஆடுகளை கடித்தபடி, ரத்தம் சொட்டச் சொட்ட மயானம் நோக்கி ஓடியும், ஆடியும் வந்தனர். இதில் சிலர், எலுமிச்சம் பழங்களை கடித்துக் கொண்டு வந்து, அருளாசி வழங்கினர்.அவர்கள், ஆக்ரோஷமாக வந்த நிலையில், பெண்கள், குழந்தைகள், சிறுவர்கள், பெரியவர்கள் என பலரும், ஊர்வல பாதைகளில் படுத்தனர். வேடம் அணிந்தவர்களும், பூசாரியும், பக்தர்களை மிதிக்காமல் தாண்டி வந்து, அருளாசி வழங்கினர்.சேலத்தில் பிரச்சித்தி பெற்ற மயானக் கொள்ளையால், மணியனூர், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, பொன்னம்மாபேட்டை, சீலநாயக்கன்பட்டி என, சேலம் மாநகர், புறநகர் பகுதியிலுள்ள அனைத்து மயானங்களும், நேற்று காளி வேடம் அணிந்து வந்தவர்கள், பிற வேடமிட்டு வந்தவர்களால், களை கட்டியது.நேற்று காலை, 10.30 மணிக்கு துவங்கிய மயானக் கொள்ளை, சில இடங்களில் இரவு வரை நீடித்தது. அதன் பின்னர், அங்காளம்மன், பெரியாண்டிச்சி கோவில்களில், சிறப்பு பூஜைகள் நடந்தது. திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மனை வழிபட்டனர்.

No comments:

Post a Comment