Friday, 9 January 2015

திருவாரூர் மாவட்டம்

திருவாரூர் மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டத்தின் தலைநகரம் திருவாரூர் ஆகும். திருவாரூர் மாவட்டம், தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து வலங்கைமான் வட்டத்தையும் நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து சில வட்டங்களையும் பிரித்து அமைக்கப்பட்ட மாவட்டம்.

பெயர் காரணம்
திருவாரூர் = திரு+ஆரூர் .
திருவாரூரில் கோவில் கொண்டுள்ள தியாகராஜர் மேலும் 6 ஊர்களில் கோவில் கொண்டுள்ளார் ( சப்தவிடங்க தலங்கள் ) எனவே முதலில் ஆரூர் (தேவார பாடல்களில் ஆரூர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது) என்றும் பின்னர் கோவில் ஊர் என்பதால் திரு சேர்க்கப்பட்டு திருஆரூர் என்றாகி திருவாரூர் என மருவியது.
திருவாரூர் என்ற பெயருக்கு வழங்கப்படும் மற்றும் ஒரு காரணம்
திருமகள் திருமாலை அடையவேண்டி திருவாரூரில் உள்ள வன்மீகநாதரை வழிபட்டு, வரம் பெற்று திருமாலை மணந்து கொண்டதுடன் தன் பெயரிலேயே இவ்வூர் வழங்கப்படவேண்டும் என்று கேட்டதால் கமலாலயம் (அ) திருவாரூர் ( திரு - லட்சுமி ,ஆர் - பூமாதேவி பூஜித்தது ) என பெயர் பெற்றது.
வரலாறு
திருவாரூர் தேரழகு, திருவிடைமருதூர் தெருவழகு, மன்னார்குடி மதிலழகு என்ற முதுமொழி மூலமாக இவ்வூரின் பெருமையை உணரமுடியும்.
திருவாரூர் சோழர்களின் 5 தலைநகரங்களில் (உறையூர், பழையாறை, தஞ்சாவூர்கங்கை கொண்ட சோழபுரம்) ஒன்றாகும். திருவாரூரை ஆண்ட மனு நீதி சோழன் பசுவிற்கு நீதி வழங்க தன் சொந்த மகனையே தேரை ஏற்றி கொன்றது வரலாற்றில் நீதிக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அறியப்படுகிறது.
இந்த நிகழ்வை சோழர்கள் கல்தேராக வடித்தனர். திருவாரூர் கோவிலுக்கு வடகிழக்கே கல்தேர் அமைந்துள்ளது. கல்தேரை பொதுமக்கள் காலை மற்றும் மாலை வேளைகளில் காணலாம்.
சிறப்புகள்
கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜர்முத்துசாமி தீட்சிதர்சியாமா சாஸ்திரி ஆகியோர் திருவாரூரில் பிறந்தவர்கள். தமிழக முன்னாள் முதலமைச்சரான மு. கருணாநிதி திருவாரூர் அருகில் உள்ள திருக்குவளை எனும் ஊரில் பிறந்தவர்.
திருவாரூர் தேர் ஆசியாவிலேயே மிக பெரிய தேராகும். திருவாரூர் தேர் 96 அடி உயரம் 360 டன் எடையும் கொண்டது. இந்த தேர் நான்கு நிலைகளை உடையது அவை முறையே 6 மீட்டர் 1.2 மீட்டர் 1.6 மீட்டர் 1.6 மீட்டர் உயரம் கொண்டவை ஆகும். தேரின் சக்கரங்கள் ஒவ்வொன்றும் 2.59 மீட்டர் விட்டம் கொண்டவை . பல கலை நயந்துடன் கூடிய வேலைபாடுகள் உடைய இந்த தேர் ஹைட்ராலிக் ப்ரேக் கொண்டு நிறுத்தப்படுகிறது. இது திருச்சி பாரத மிகு மின் நிறுவனம் (BHEL) நிறுவனப் பொறியாளர்களைக் கொண்டு கையாளப்படுகிறது.
இந்தத் தேரில் சுரங்க வழி ஒன்றும் உள்ளது சிறப்பாகும். சென்னை வள்ளுவர் கோட்டம் திருவாரூர் தேரின் மாதிரியை கொண்டு வடிவமைக்கப்பட்டது. முன்பு ஒரு காலத்தில் மனித சக்தி மட்டும் அல்லாது யானைகளும் தேரை இழுக்க பயன்பட்டன. சில சமயம் தேர் நிலை அடிக்கு வர மாத கணக்காகும். ஆனால் தற்பொழுது 4 புல்டோசர்கள் கொண்டு ஒன்று அல்லது இரண்டு நாட்களில் தேரை நிலையடிக்கு கொண்டு வந்து விடுகிறார்கள்.

No comments:

Post a Comment