Friday, 9 January 2015



சூ ரி ய ன் 










அம்மையப்பன் ஊர்  பற்றிய கதை

வருஷங்களுக்கு முன்னாடி எங்கள் ஊருக்கு வந்து இருந்தீங்கன்னா, சூரிய ஒளி இறங்குறதை நீங்கள் பார்க்க முடியாது. அவ்வளவு பசுமையான ஊர். ஒருபுறம் ஓடம்போக்கி, இன்னொருபுறம் வாளவாய்க்கால், மற்றொருபுறம் காட்டாறுனு தண்ணிப் பஞ்சம் இல்லாத ஊர். ஊர் முழுக்க மா, பலா, வாழை, கொய்யானு மரங்கள் அடர்ந்து இருக்கும். எனக்கு இன்னும் நல்லா நெனைப்பு இருக்கு. அந்தக் காலத்தில் எங்கத் தெருவில் 10 வீடுங்கதான் இருந்துச்சு. ஆனா, அந்தச் சின்ன தெருவுக்குள்ள ஆயிரத்துக்கும் மேல மரங்கள் இருந்துச்சு!
அந்தக் காலத்தில் தஞ்சாவூர் - திருவாரூர் ராஜபாட்டையில் இருந்திருக்கு அம்மையப்பன். இன்னிக்கு ஊருக்கு நடுவில் இருக்குற மஞ்ச சத்திரம் அதுக்கு ஓர் அத்தாட்சி. தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு முன்பே சோழர்களால் கட்டப்பட்ட சிவன் கோயில் ஒண்ணு இங்கே இருந்து அழிஞ்சுப் போச்சு. அது இருந்த இடத்துக்குப் பக்கத்தில்தான் இப்ப நாங்க சொக்கநாதர் - மீனாட்சி கோயிலை எழுப்பி இருக்கோம். காலங்காலமாகப் பல சமூகங்களும் சேர்ந்து வாழும் ஊராகவே இருந்திருக்கு, எங்க ஊர். சமணர்களும் சௌராஷ்டிரர்களும்கூட பல நூற்றாண்டுகளா இங்கே இருக்காங்க.
திராவிட இயக்க வளர்ச்சிக்கும் கம்யூனிஸ இயக்க வளர்ச்சிக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பு அளிச்சவங்க அம்மையப்பன்காரங்க. பெரியாரோட தீவிர தொண்டர்களில் ஒருத்தராக இருந்த காவனூர் செல்லப் பிள்ளை, கணேசன், ராஜாங்கம் மூணு பேரும் திராவிட இயக்கத்தை வளர்த்தவங்க. முத்தையா சேர்வையும் ந.தருமையனும் இந்தப் பகுதியில் கம்யூனிஸ இயக்கத்தை வளர்க்க ரொம்பவே பாடுபட்டவங்க. இவங்க ரெண்டு பேரும் தேர்ந்த சிலம்பு ஆட்டக்காரங்க. அந்த ஆட்டத்தையே இயக்க வளர்ச்சிக்கும் பயன்படுத்தினாங்க. அந்தக் கால அம்மையப்பனைச் சேர்ந்த 18 கிராமத்துக்காரவங்களும் மறக்கக் கூடாத அஞ்சு மனிதர்கள் தியாகராஜ பிள்ளை, ஆனைவடபாதி முத்துகிருஷ்ண நாயுடு, பெருந்தரக்குடி கோவிந்தராஜ் பிள்ளை, வீ.சாம்பசிவம், வே.சோமசுந்தரம். தன்னலம் கருதாமல் இந்தப் பகுதி மக்களுக்காக உழைச்சவங்க இவங்க.
எங்க ஊரோட தனித்துவமான கலை- சிலம்பு ஆட்டம். அப்ப எல்லாம் அம்மையப்பன்னு சொன்னாலே, எதிர்த்து ஆடற ஆட்டக்காரவங்க அச்சப்படுவாங்க. அப்படி ஓர் ஆட்ட மரபு எங்க ஊருக்கு உண்டு. இப்ப குளிக்கரையில் மட்டும் கொஞ்சம் பேர் ஆடறாங்க. அதேபோல, அம்மையப்பனுக்குன்னு தனிக் கூத்து மரபும் உண்டு. எங்களோட பெரிய திருவிழாவே பிடாரி அம்மன் கோயிலில் நடக்குற வைகாசித் திருவிழாவும் தை மாச அமாவாசையில் தொடங்கி மாசி மாச பௌர்ணமியில் முடியும் காமன் தகனமும்தான். சதிராட்டத்தில் பேர் போன தங்கச்சி அம்மாள், ஆர்மோனியத்தில் பேர் வாங்கின நவநீதம், பிற்காலத்தில் பெரிய நாடகக்காரவங்களா இருந்த சகுந்தலா... இவங்க மூணு பேருமே எங்க ஊர்க் காரவங்கதான்!
சாப்பாட்டுல எங்க ஊரோட தனித்துவம் சர்க்கரைவள்ளிக் கிழங்கும் மொச்சைப் பயறும். எங்க ஊருக்கு வர்ற விருந்தாளிங்க இங்க நாங்க வைக்கிற 'கச்ச கருவாடு போட்ட மொச்சக் குழம்பை’ மறக்கவே மாட்டாங்க. சுத்துவட்டாரக் கிராமங்களுக்கு அந்தக் காலம் தொட்டு அம்மையப்பன்தான் சந்தை. அந்தக் காலத்தில் உழைச்சு, களைச்சு ஊர்த் திரும்பும் சுத்துப்பட்டு மக்களோட ஒரே சந்தோஷம் கிட்டுப் பிள்ளை கடை அல்வாவும் ஜுபிடர் டாக்கீஸ் நாடகங்களும். காவனூர் முக்குல கடைவெச்சு இருந்த கிட்டுப் பிள்ளை அல்வாவுக்குப் பண்ணையையே பறிகொடுத்த பண்ணையார்கள் உண்டுனு சொல்வாங்க. அப்படி ஒரு ருசி. அதேபோல, ஜுபிடர் டாக்கீஸ். வருஷத்தில் பாதி நாள் நாடகம், பாதி நாள் சினிமானு எங்களை சந்தோஷப் படுத்தின அரங்கம் அது!
இப்ப, திரும்பிப் பார்க்கும்போது ஊர் நிறைய மாறிட்டது தெரியுது. அன்னைய வாழ்க்கை இன்னைய ஊர்ல இல்லை. அந்த மாதிரி சமயங்களில் நான் என் புத்தகங்கள்ல மூழ்கிடுவேன். அதுல எனக்குப் பிடிச்ச என் ஊர் இருக்கு.

எங்க ஊர்

திருவாரூர் மாவட்டம், அம்மையப்பன், அரசினர் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 1,200 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மிகச்சிறந்த பள்ளியாக விளங்குகிறது. இப்பள்ளி இயற்கை சூழலோடு சிறப்பாக இயங்கி வருகின்றது. பல்வேறு அரசு பள்ளிகளுக்கிடையே இப்பள்ளி முன்னுதாரணமாக இயங்கி வருகின்றது. அம்மையப்பனைச் சுற்றி ஏறத்தாழ 20 கிராமங்களில் இருந்து ஏழை எளிய மக்களின் பிள்ளைகளே இங்கே பயின்று வருகின்றனர்



school-front

திருவாரூர் மாவட்டம்

திருவாரூர் மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டத்தின் தலைநகரம் திருவாரூர் ஆகும். திருவாரூர் மாவட்டம், தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து வலங்கைமான் வட்டத்தையும் நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து சில வட்டங்களையும் பிரித்து அமைக்கப்பட்ட மாவட்டம்.

பெயர் காரணம்
திருவாரூர் = திரு+ஆரூர் .
திருவாரூரில் கோவில் கொண்டுள்ள தியாகராஜர் மேலும் 6 ஊர்களில் கோவில் கொண்டுள்ளார் ( சப்தவிடங்க தலங்கள் ) எனவே முதலில் ஆரூர் (தேவார பாடல்களில் ஆரூர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது) என்றும் பின்னர் கோவில் ஊர் என்பதால் திரு சேர்க்கப்பட்டு திருஆரூர் என்றாகி திருவாரூர் என மருவியது.
திருவாரூர் என்ற பெயருக்கு வழங்கப்படும் மற்றும் ஒரு காரணம்
திருமகள் திருமாலை அடையவேண்டி திருவாரூரில் உள்ள வன்மீகநாதரை வழிபட்டு, வரம் பெற்று திருமாலை மணந்து கொண்டதுடன் தன் பெயரிலேயே இவ்வூர் வழங்கப்படவேண்டும் என்று கேட்டதால் கமலாலயம் (அ) திருவாரூர் ( திரு - லட்சுமி ,ஆர் - பூமாதேவி பூஜித்தது ) என பெயர் பெற்றது.
வரலாறு
திருவாரூர் தேரழகு, திருவிடைமருதூர் தெருவழகு, மன்னார்குடி மதிலழகு என்ற முதுமொழி மூலமாக இவ்வூரின் பெருமையை உணரமுடியும்.
திருவாரூர் சோழர்களின் 5 தலைநகரங்களில் (உறையூர், பழையாறை, தஞ்சாவூர்கங்கை கொண்ட சோழபுரம்) ஒன்றாகும். திருவாரூரை ஆண்ட மனு நீதி சோழன் பசுவிற்கு நீதி வழங்க தன் சொந்த மகனையே தேரை ஏற்றி கொன்றது வரலாற்றில் நீதிக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அறியப்படுகிறது.
இந்த நிகழ்வை சோழர்கள் கல்தேராக வடித்தனர். திருவாரூர் கோவிலுக்கு வடகிழக்கே கல்தேர் அமைந்துள்ளது. கல்தேரை பொதுமக்கள் காலை மற்றும் மாலை வேளைகளில் காணலாம்.
சிறப்புகள்
கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜர்முத்துசாமி தீட்சிதர்சியாமா சாஸ்திரி ஆகியோர் திருவாரூரில் பிறந்தவர்கள். தமிழக முன்னாள் முதலமைச்சரான மு. கருணாநிதி திருவாரூர் அருகில் உள்ள திருக்குவளை எனும் ஊரில் பிறந்தவர்.
திருவாரூர் தேர் ஆசியாவிலேயே மிக பெரிய தேராகும். திருவாரூர் தேர் 96 அடி உயரம் 360 டன் எடையும் கொண்டது. இந்த தேர் நான்கு நிலைகளை உடையது அவை முறையே 6 மீட்டர் 1.2 மீட்டர் 1.6 மீட்டர் 1.6 மீட்டர் உயரம் கொண்டவை ஆகும். தேரின் சக்கரங்கள் ஒவ்வொன்றும் 2.59 மீட்டர் விட்டம் கொண்டவை . பல கலை நயந்துடன் கூடிய வேலைபாடுகள் உடைய இந்த தேர் ஹைட்ராலிக் ப்ரேக் கொண்டு நிறுத்தப்படுகிறது. இது திருச்சி பாரத மிகு மின் நிறுவனம் (BHEL) நிறுவனப் பொறியாளர்களைக் கொண்டு கையாளப்படுகிறது.
இந்தத் தேரில் சுரங்க வழி ஒன்றும் உள்ளது சிறப்பாகும். சென்னை வள்ளுவர் கோட்டம் திருவாரூர் தேரின் மாதிரியை கொண்டு வடிவமைக்கப்பட்டது. முன்பு ஒரு காலத்தில் மனித சக்தி மட்டும் அல்லாது யானைகளும் தேரை இழுக்க பயன்பட்டன. சில சமயம் தேர் நிலை அடிக்கு வர மாத கணக்காகும். ஆனால் தற்பொழுது 4 புல்டோசர்கள் கொண்டு ஒன்று அல்லது இரண்டு நாட்களில் தேரை நிலையடிக்கு கொண்டு வந்து விடுகிறார்கள்.
கயல் படத்தின் திரை விமர்சனம்



நாடோடி மனநிலையும் அந்தந்தத் தருணங்களை ரசித்து வாழும் சிந்தனையும் கொண்ட இரண்டு இளைஞர்களின் அனுபவமாகத் தொடங்குகிறது பிரபு சாலமனின் கயல். இந்த அனுபவங்களினூடே ஊடுருவும் காதலும் அதன் தாக்கங்களும்தான் கயல்.
ஆரோனும் அவரது நண்பர் சாக்ரடிஸும் அனாதைகள். “உன் வாழ்க்கையின் வெளிச்சத்தைக் கண்டுபிடி” என்று ஆரோனின் தந்தை எழுதிவைத்துவிட்டுப் போன கடிதத்தில் இருக்கிறது. அந்த வெளிச்சத்தைத் தேடி வாழ்க்கையை நம்பிக்கையுடன் எதிர்கொள்கிறார்கள். ஆறு மாதம் வேலை, மீதி ஆறு மாதம் ஊரைச் சுற்றுவது என்று திரிகிறார்கள்.
ஊரைவிட்டு ஓடும் ஒரு காதல் ஜோடிக்குத் தற்செயலாக உதவி செய்யப்போக, சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள். அந்தச் சிக்கல் செமத்தியான அடியையும் காதலையும் பரிசளித்துவிட்டுப் போகிறது.
ஆழமான காதலை அதன் இயல்பான ஆவேசத்துடன் சித்தரிப்பதில் வல்லவர் இயக்குநர் பிரபு சாலமன். பாத்திரங்களின் உணர்வுகளைக் கூடியவரையிலும் இயல்பாகச் சித்தரித்திருக்கிறார். கயலைக் கண்டதும் ஆரோனின் முகத்தில் கூடும் வெளிச்சமும் ஆரோனை எண்ணிக் கயல் காதலால் கசிந்துருகுவதும் அழகாகப் படமாக்கப்பட்டுள்ளன.
பயண அனுபவங்களையும் காதலின் அவஸ்தைகளையும் சின்னச் சின்ன சம்பவங்கள் மூலம் காட்சிப்படுத்துகிறார் சாலமன். பெண்ணைக் காணாமல் பரிதவிக்கும் ஜமீன்தார் வீட்டுக்குள் நண்பர்கள் சிக்கிக்கொள்ளும் காட்சிகள், அங்கே நடக்கும் சம்பவங்கள் ஆகியவை முன் பாதியில் படத்தை முன்னகர்த்திச் செல்ல உதவுகின்றன. காதலும் அலைதலும் தொடங்கிய பிறகு படம் ஒரே வட்டத்தில் சுழல ஆரம்பிக்கிறது. இத்தனை கண்ணாமூச்சி தேவையா?
சுனாமியால் ஏற்படும் பாதிப்பு பதைபதைக்க வைத்தாலும் சுனாமி இந்தக் கதையில் இயல்பாகப் பொருந்தவில்லை என்ற உறுத்தலும் இருக்கிறது.
ஓடிப் போன மகள் குறித்த தவிப்புக்கும் சாதிப் பெருமை சார்ந்த ஆவேசத்துக்கும் இடையில் தகப்பன் குமுறும் காட்சி அருமையாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஜமீன் சித்தப்பா, கல்லூரி கோச் எனச் சிறிய பாத்திரங்களைச் செதுக்கிய விதம் அழகு.
கதைக் களத்தின் பின்னணியையும் கதைப்போக்கின் தர்க்கத்தையும் பாத்திரங்களின் தன்மைகளையும் வலுவாகக் கட்டமைக்கும் திறன் கொண்ட சாலமன் இந்தப் படத்தில் சறுக்கியிருக்கிறார். அழகிய நிலக்காட்சிகளாக உருப்பெறும் கன்னியாகுமரியும் ஆரல்வாய்மொழியும் உயிரோட்டமான சித்திரங்களாக உருப்பெறவில்லை. பிரதான பாத்திரங்கள் கவனமாகச் செதுக்கப்படவில்லை. கதைப் போக்கில் வேகமும் இயல்பான நகர்வும் குறைவு.
சாதிக் கட்டுமானத்தையும் அதன் தீவிரத்தையும் நுட்பமாகச் சொல்லும் இயக்குநர் அதே சாதியைச் சேர்ந்த கயலின் காதல் விஷயத்தை அந்தக் குடும்பம் அத்தனை அசட்டையாக எடுத்துக்கொள்வதாகக் காட்டுவது பெரிய ஓட்டை. பல காட்சிகள் தேவைக்கு அதிகமாக நீள்கின்றன. படமும் அப்படியே. முகங்களுக்கு வைக்கப்படும் குளோசப் ஷாட்கள் நிஜமாகவே பயமுறுத்துகின்றன.
இயற்கையின் அற்புதங்களை சாலமன் காட்சிப்படுத்தும் விதம் பாராட்ட வேண்டிய அம்சம். படம் கண்களுக்கு விருந்து. வெற்றிவேல் மகேந்திரனின் ஒளிப்பதிவு அற்புதம். குறிப்பாக ‘பறவையா பறக்குறோம்’ பாடல் படமாக்கப்பட்ட விதம் அழகு.
இமாம் இசையில் ‘பறவையா பறக்குறோம்’, ‘எங்கிருந்து வந்தாயோ’ ஆகிய பாடல்கள் நன்றாக இருக்கின்றன. ஆனால் ‘மைனா’, ‘கும்கி’ போல மனதில் தொடர்ந்து ரீங்கரிக்கும் பாடல் எதுவும் இல்லை. பின்னணி இசை படத்துக்கு வலுவூட்டுகிறது.
ஆழிப் பேரலை பொங்கும் கிராபிக்ஸ் நன்றாக உள்ளது. டால்பி அட்மாஸ் என்கிற புதிய இசை வடிவத்தைப் பயன்படுத்தியிருப்பது காட்சியின் தாக்கத்தைக் கூட்டுகிறது. ஆனால், சுனாமிக்குப் பின் நம்முடைய கடலோரப் பகுதிகள் எப்படிப் பிய்ந்து கிடந்தன, எத்தனை நாட்களுக்குக் கடலோர மக்கள் சீந்துவார் இல்லாமல் கிடந்தனர், கடற்கரையோரம் முழுவதும் எப்படி மனித உறுப்புகள் சிதறிக் கிடந்தன என்கிற விஷயங்களெல்லாம் படக் குழுவுக்குத் துளியும் தெரியவில்லை. ஏதோ, ஒரு வெள்ள நிவாரண நடவடிக்கைக் காட்சிகள் போல சித்திரிக்கப்பட்டிருக்கின்றன சுனாமிக்குப் பிந்தைய காட்சிகள்.
ஆரோனாக வரும் சந்திரன் உணர்ச்சிகரமான காட்சிகளில் நன்றாக நடிக்கிறார். பயணக் காட்சிகளில் எப்போதும் சிரித்துக்கொண்டே இருப்பது பொருத்தமாக இல்லை. நண்பனாக வரும் வின்சென்ட் கவனம் ஈர்க்கிறார். ஆனந்தி (கயல்) பிரகாசமான கண்களுடன் நுட்பமாக உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறார். காதல் வயப்பட்டதை வெளிப்படுத்தும் இடத்திலும் காதலனின் அடையாளம் கையை கைவிட்டுப் போகும்போதும் சபாஷ் போடவைக்கிறார்.
படம் முழுவதும் யாராவது வாழ்க்கைத் தத்துவங்களைப் பேசிக்கொண்டே இருப்பது அலுப்பு. குறிப்பாகக் காவல் நிலையத்தில் நடக்கும் தத்துவ விசாரம் கொட்டாவிகளைக் கிளப்புகிறது. அழகியல் ரீதியாகக் கவரும் படம் கதையை நகர்த்திச் செல்லும் விதத்தில் தடுமாறுகிறது
புன்னகை...

மொ ழி யும் மழையினை 
வான் சிறப்பு
என்று பாடினான் வள்ளுவன் !
பொழியும் நிலவனை 
காதல் சிறப்பு
என்று பாடினான் கவிஞர்கள் !
புரியும் புன்னகையை
என் சிறப்பு 
என்று யோசித்திருக்கையில்
புன் சிரிப்பு
என்று எழுது என்று
என் தோழி சொன்னால்...

பழமொழி



பழமொழிகள் ஒரு சமுதாயத்திலே நீண்ட காலமாகப் புழக்கத்தில் இருந்து வரும் அனுபவக் குறிப்புகள் ஆகும். பழமொழிகள் அச் சமுதாயத்தினரின் அனுபவ முதிர்ச்சியையும், அறிவுக் கூர்மையையும் எடுத்து விளக்குவதாக அமைகின்றன. இவை நாட்டுப்புறவியலின் ஒரு கூறாகவும் அமைகின்றன. எடுத்துக்கொண்ட பொருளைச் சுருக்கமாகவும் தெளிவுடனும் சுவையுடனும் பழமொழிகள் விளங்கவைக்கின்றன. சூழமைவுக்கு ஏற்றமாதிரி பழமொழிகளை எடுத்தாண்டால் அந்த சூழமைவை அல்லது பொருளை விளங்க அல்லது விளக்க அவை உதவும்.